Showing posts with label யோகாசனம். Show all posts
Showing posts with label யோகாசனம். Show all posts

Thursday, February 13, 2014

யோகாசனம்

                                                                  யோகாசனம்

       யோகம்  என்பதற்கு  பல  பொருள்  உள்ளது  அவைகளில்  அதிர்ஷ்டம், உயர்ச்சி, தகுதி, பலன், வரம் என்பது சில. ஆனால் நாம் அதிர்ஷ்டம் என்பதை மட்டும் அதிகமாக பயன்படுத்துகிறோம். உண்மையில் யோகம் என்பற்கு ஒருங்கிணைப்பு, நற்சேர்க்கை என்பதே மிகச்சிறந்த பொருள் ஆகும்."நம் அவல குணங்களை நீக்கி பலவித யோகத்தால் நற்கதி அடைவதை யோகம்" என்பார் கீதையில் கிருஷ்ணன். யோகா செய்வது எப்படி என்ற கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்வது மிகக் கடினம். ஆசனம் என்பதற்கு அமர்தல், இருக்கை, உட்காருதல் என்று பொருள் கொள்ளலாம். யோகத்தை அடையச் செய்யப்படும் ஆசனம் யோகாசனம் ஆகும்.

யோகம் பல வகைப்படும். அவைகளை அஷ்டாங்கயோகம் என்பார் யோகி பதஞ்ஜலி முனிவர்.

சிவயோகம் - அஷ்டாங்க யோகங்கள்
அஷ்ட என்றால் எட்டு என்று பொருள்.
அஷ்டாங்க யோகங்களாவன

   1. இயமம்:
      நித்திய பிரார்த்தனைகள், உயிர்களிடத்தில் அன்பு, சத்தியம் கடைபிடித்தல், கொல்லாமை, புலன் அடக்கம், ஆசை இல்லாமை.
   2. நியமம்:
      இது கிரியை எனப்படும். தூய்மை, நிறைவு, நோன்பு, கல்வி, அபயம் அடைதல்.
   3. ஆசனம்:
      யோகாசன முறைகள்
   4. பிராணயாமம்:
      மூச்சை கட்டுப்படுத்துதல் அல்லது நெறிப்படுத்தல்
   5. பிரத்தியாகாரம்:
      உள்ளத்தை கண்டபடி அலையவிடாமல் தடுத்து காத்தல்
   6. தாரணை:
      மனதை தியான யோக்கியமானதோர் ஸ்தானத்திலிருத்துவதாம். ஹ்ருதயமும் ப்ரஹ்ம ரந்திரமுமே தியான யோக்கிய ஸ்தானங்களாம்.
   7. தியானம்:
      ஒன்றையே நினைதது எண்ண உருவாக்கத்தை கட்டுப்படுத்தல்
   8. சமாதி:
      உயிர் பிரம்மத்துடன் கலந்த நினைவற்ற இன்ப நிலை

இதையே

இயம நியமமே எண்ணிலா ஆசனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
-- திருமூலர் - திருமந்திரம்.10 பா.542

என்று திருமூலர் அஷ்டாங்க யோகத்தைப்பற்றி கூறுகிறார். இவைகளின் பொருள் குண்டலினி யோகத்தில் சிறுது வேறுபாடு இருக்கும்.

இவ்வகை எட்டு யோக வகையில் ஆசனம் என்பது மூன்றாவது உள்ளது.யோகிகளுக்கும். தவம் செய்வோருக்கும் மட்டுமல்லாது இல்லற வாசிகளுக்கும் இவைகள் மிக பயன்படுபவை ஆகும்.

யோக முறைகள்

    * இராஜயோகம்:
      ஒரே இடத்தில் அமர்ந்து செய்ய்படும் தியானம்.
    * ஹடயோகம்:
      உடலை பலவகை இருக்கைகளுக்கு உட்படுத்தி மனதை பண்படுத்தல்
    * கர்மயோகம்:
      பலனை எதிர்பாராமல் கர்மங்கள், தொண்டுகள் செய்து வாழ்தல்
    * ஞானயோகம்:
      மெய்ஞான அறிவால் இறைவனை அறிந்து அதன் படி நடத்தல்
    * பக்தி யோகம்:
      இறைவன் மேலும் உயிர்களின் மேலும் அளவுகடந்த பக்தியும் அன்பும் வைத்தல்
    * மந்திர யோகம்:
      மந்திர ஜபத்தால் சக்தியை உரு கொடுத்தல்
    * கீதா யோகம்:
      இறைவனை நினைத்து உருகி பஜனையால் ஆராதனை செய்தல்

பலவித யோக முறைகளில் ஹடயோகம் என்பதே யோகாசனம் எனப்படும். ஆக யோகம் என்பதில் ஒரு சிறு பகுதியே யோகாசனம்ஆகும்