Friday, December 2, 2016

அகத்தியர் ஞானம் – 30 பாடல்: 1,2


அகத்தியர் ஞானம் – 30

பாடல்: 1

மெய்ஞான குருபரனைப் பூசைபண்ணு
வித்தைந்து சற்குருவை நிதமும் போற்று
கையாற மனமாற ஞானம் சொல்லு
காரமாங் குருபதத்தைக் கருதிப்பாரு
வையமெல்லாம் கொண்டாட கருவைச் சொல்வேன்
மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே
பொய்யாத உபதேச குருவைப் போற்றி
புகழாக பன்னிரெண்டு வருசங்காரே.

பொருள்

  
மெய்ஞான குரு முருகனை வணங்கு. அகாரா உகார மகார நாத விந்து எனப்பட்ட ஐந்து வித்துக்களை உருவாக்கிய சற்குருவான தட்சணாமூர்த்தியை தினமும் வணங்கு. நான் சொல்லிக் கொடுத்த ஞானத்தின் செய்முறைகளை மறைக்காமல் மனமாறச் சொல்லு பாடலின் பொருள் தெரியாவிட்டால் ஓம்கார குருவான என்னிடம் கேள். இந்த உலகம் கொண்டாடும் வகையில் கனவு நிலையில் பொருள் சொல்லுவேன். ஆணவம் கொண்டு மகிழ்ந்து பேசாதே. உங்களுக்குப் பொய்யான உபதேசம் செய்யாத பொய்த்துப் போகாத உபதேசம் செய்யும் குருவிடம் 12 ஆண்டுகள் அவர் புகழ் சிறக்க ஞானம் கற்றுக்கொள்.  


பாடல் 2:

கார்த்தாக்காலோரெழுத்து வழியும் சொல்வார்
கருச்சொல்வார் குருச்சொல்வார் களங்கமற்ற
பார்த்தாக்காற் சித்திமுத்தி யிரண்டுஞ் சொல்வார்
பரிவாக வாலை மூன்றெழுத்துஞ் சொல்வார்
சேர்த்தாக்காற் லெட்டோடே யிரண்டும் சொல்வார்
சிவஞ் சொல்வார் நாலுக்குமிடமும் சொல்வார்
பூத்தாக்காலாயிரத்தெட்டிதழின் வாசி
பூங்கமலத் திருவடியை பூசை செய்யே

பொருள்:

உண்மையான குருவிடம் சரணடைந்து கற்றுக்கொள். அவரிடம் களங்கமற்று இருந்து கற்றுக்கொள். அவர் உனக்கு கற்றுத் தருபவைகள்.

Ø  ஓம் என்ற ஓர் எழுத்தின் பொருள், அதன் மறைப்பு, கருப்பொருள்
Ø  குரு என்ற முப்பூ என்ற சாகா மருந்து செய்முறை
Ø  அமானுஷ்ய சக்திகளான “அஷ்டமா சித்திகள்” அடையும் வழி
Ø  முக்தி அடையும் வழி
Ø  வாலை மூன்று எழுத்து என்ற அகார, உகார, மகார பற்றிய விளக்கம்
Ø  எட்டு உடன் இரண்டு சேர்க்கும் வழி
Ø  சிவ யோகம் செய்யும் முறை
Ø  வாசி யோகத்தில் சகஸ்ஹார தளத்தில் 1008 இதழ் தாமரை ஒளியைக் காட்டுவார். இத்தகைய வாசியின் தாமரை மலர்ப் பாதங்களைப் பூசை செய்.

Thursday, June 30, 2016

நெல்லியின் பயன்கள்

நெல்லியின் பயன்கள்

சில நோய்களுக்குக் காரண- காரியம் கண்டறிய இயலாமல் நவீன மருத்துவர்கள் திண்டாடுவதைக் காண்கிறோம். சித்தர்கள் வகைப்பாடு செய்துள்ள முக்குற்ற நோய்களின் பட்டியல் அவர்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம்.

நீங்கள் நெடுநாட்களாக ஏதேனும் நோயினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை யும் உங்கள் நோயையும் பார்த்து மருத்துவர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்களா? கவலையை விடுங்கள். உங்களுக்கு ஒரு எளிய மருத்துவம் சித்தர்களால் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லி மரத்தின் வேரை 20 கிராம் அளவில் எடுத்து, அத் துடன் 20 வால்மிளகு சேர்த்து விழுதாய் அரைத்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு பாதியாகச் சுண்டச் செய்து, காலை- மாலை இருவேளையும் உணவுக்கு முன்பாக மூன்று தினங்கள் சாப்பிட்டு வாருங்கள். லேசாய் பேதி காணும்; பயம் வேண்டாம். நெல்லி மரத்தின் வேர் உங்களை வசியப்படுத்திவிடும். உங்கள் நோய் எதுவாக இருந்தாலும் கட்டுக்குள் வருவதை நீங்களே உணர்வீர்கள்
ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக்கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது.

நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம்.

இதற்கெல்லாம் நேரமில்லாவிட்டால், நேரே ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற "சயவனபிராச லேகியம்' அல்லது "நெல்லிக்காய் லேகியம்' எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை வருடக் கணக்கில் சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம்.


சர்க்கரை நோயா?

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் உடம்பின் கட்டுத்தன்மையை இளக்கும் தன்மையாய் மாற்றும் ஒரு வகை நோயாகும். துவர்ப்பு மட்டுமே உடலை மீண்டும் கட்டும் தன்மைக்குக் கொண்டு செல்லும். நெல்லிக்காய் சர்க்கரை நோயை மட்டுமல்ல; உடலை மேம்படுத்த நினைக் கும் அனைவருக்கும் அமிர்த சஞ்ஜீவினியாய் வேலை செய்யும்.

நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

கடைகளில் "நிஷா ஆமலகி சூரணம்' என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதனையும் வாங்கி உபயோகித்து சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.

நெல்லிக்காய் தைலம்!

பச்சை நெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, கற்றாழைச்சாறு, சிறுகீரைச்சாறு, பசும்பால், செவ்விளநீர் ஆகியவற்றை வகைக்கு 300 மி.லி. எடுத்துக் கொள்ளவும். அதிமதுரம், கோஷ்டம், ஏலம், கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிப்பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், இலவங்கப்பத்திரி, இலவங்கப்பட்டை, சோம்பு, வால்மிளகு ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்துத் தூள் செய்து, ஆவின்பால், செவ்விளநீர் விட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு லிட்டர் நல்லெண்ணெய்யுடன் மேற்சொன்ன சாற்றையும் அரைத்த விழுதினையும் கலந்து அடுப்பிலேற்றி, சிறு தீயாய் எரித்து, தைல பதத்தில் இறக்கிவிடவும்.

இந்தத் தைலத்தை தினசரி தேய்த்து வர, தலைமுடி கொட்டுதல், இளநரை போன்றவை மறையும். கண் நோய்கள் அனைத்தும் தீரும். வெட்டைச்சூடு, கை, கால் எரிச்சல், உடம் பெரிச்சல் போன்றவை தீரும். பித்தத்தினால் உண்டாகும் தலைவலியும் தீரும்.

பித்தம் தணிய...

நெல்லிமுள்ளி, வில்வம், சீரகம், சுக்கு, சிற்றா முட்டி வேர், நெற்பொறி ஆகியவற்றை வகைக்கு 15 கிராம் அளவில் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீ ரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டவும். இதில் 100 மி.லி. வீதம் மூன்று மணிக்கொரு முறை மூன்று வேளை சாப்பிட எப்பேர்ப்பட்ட பித்த உபாதை களும் தணியும்.

நெல்லிக்காயை பகல் வேளையில் அடிக்கடி உண்டு வந்தால், அது ஒரு தேவ மருந்தாகவே நம் உடம்பில் செயல்படும். நெல்லிக்காய் உண்பதால் குடி, புகை, போதையை மறக்கலாம். கபநோய், சைனஸ் போன்ற கோளாறுகளும் தீரும். வாந்தி, மயக்கம், தலைசுற்றல், மலச்சிக்கல், சர்க்கரை வியாதி போன்றவை நீங்க சித்தர்கள் அருளிய அமுதம் நெல்லிக்கனியே ஆகும்.

கருநெல்லி- காயகற்பம்

நூறாண்டு இளமையுடன் வாழ சித்தர்கள் அருளிய கருநெல்லியை சிவனின் அம்சமாகவே காணுங்கள். இன்று காண்பதற்குக்கூட கருநெல்லி கிடைக்காத நிலை!

கருநெல்லி- உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும். உடம்பெல்லாம் ஒளி உண்டாகும். ஒருவித தேஜஸ், வசியம், பொருள் சேர்க்கை அனைத்தும் உண்டாகும். கண்டவ ரெல்லாம் விரும்பும் திகட்டாத திருமேனியைப் பெறலாம். அத்தகைய கருநெல்லி சோழ தேசத்தில் ஆதிக்கும் பகவானுக்கும் மகனாய்ப் பிறந்து அர சாண்ட அதியமானுக்கு தகடூர் மலைச்சாரலில் கிடைத்தது. கிடைத்தற்கரிய கருநெல்லியை தன் பொற்கரங்களால் ஏந்திய அதியமான், ஆத்திசூடி பாடி தமிழ் வளர்த்த ஔவையார் முன் நின்றான்.

""ஔவைப் பிராட்டியாரே... தாங்கள் இக்கருநெல்லிக் கனியுண்டு, உடல் நலம் பெற்று தமிழ் வளர்த்துச் செல்ல வேண்டும்'' என்றான்.

ஔவையாரோ, ""நீ சாப்பிட்டால் உன்னை அண்டிப் பிழைக்கும் கோடானு கோடி உயிர் களும் நிறைவுடன் வாழ இயலுமே!'' என்றார்.

""அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகனுக்கே பாடம் சொன்ன ஔவையே! ஆட்சி என்பது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் உம் கரம் பட்டு வளர்த்த தமிழ் வானைமுட்டி வளர்ந் தோங்கும். கருநெல்லி தங்களுக்குரியதே. மறுக் காமல் உண்பீர்'' என மனமுவந்து தந்தான்.

ஔவையாரும் மகிழ்வுடன் கருநெல்லி உண்டு தமிழுக்குத் தலையாய சேவை செய்தார். அந்தக் கருநெல்லி கிடைக்காவிட்டாலும் இக்கலியுகத்தில் காணும் பெருநெல்லி உண்டு, பேரிளமை கொண்டு பெருவாழ்வு வாழ்வோம். வாழ்க வளமுடன்!

Tuesday, January 5, 2016

விநாயகர் வழிபாடு



விநாயகர் வழிபாடு


பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பொருள்: எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும் மறைத்தும் லீலைகள் செய்பவனும் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுவோம்.

உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.

பொருள்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாபங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னார் திருவடிகளைச் சரண் அடைவோம்.

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.


பொருள்: எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந் திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவரும் ஆகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரண் அடைவோம்.

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: செயல்களாகவும், செய்யப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப் பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்தும் நம்மை விடுப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த் மெய்யான தெய்வதை நாம் சரண் அடைவோம்.

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், யாவராலும் அறிந்து கொள்ளுதற்கு அரிய மேலானவனாக இருப்பவனும், வேதத்தின் முடிவாக இருந்து நடம் புரியும் குற்ற மற்றவனும், வெட்ட வெளியில் எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும், தன்வயத்தனாதல்; தூய உடம்பினன் ஆதல்; இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல்; இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்; பொருள் உடைமை; முடிவில் ஆற்றல் உடைமை; வரம்பில் இன்பம் உடைமை, இவற்றை முறையே வட நூலார் சுதந்தரத்துவம் விசுத்த தேகம்; நிரன்மயான்மா ; சர்வஞ்த்வம்; அநாதிபேதம்;அநுபத சக்தி; அநந்த சக்தி; திருப்தி ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவனும், ஆன முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைவோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பொருள்: மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும்,ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ,சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவரு மாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரண் அடைவோம்.

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

பொருள்: எந்தப் பந்தமும் அற்றவன்; பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறியமுடியாது. அவன் பந்தமே இல்லாதவன். ஆனால் எல்லா உயிர்களையும் பந்தப்படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரண் அடைவோம். பசு பதி இரண்டுமே இறைவன். பசு பதியோடு ஒடுங்குவதே அழியா இன்ப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.

நூற்பயன்:
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

பொருள்; இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றிபெறுவார்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள். சதுர்த்தியன்று நற்சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால் அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதை போன்ற (எட்டு) அட்டமாசித்துளையும் பெறுவார்கள்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்

பொருள்: தொடர்ந்து இரு மாதங்கள் நாள் தோறும் முறையாகப் பாராயணம் செய்தால் அரசர்களும் வசியம் ஆவார்கள். தினமும் இருபத்தோரு முறைகள் பாராயணம் செய்தால் குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் நலம் போன்ற சகல செவங்களும் வந்துசேரும்.

உரை எழுதியவர்: திருப்பனந்தாள் புலவர் அய்யா.. துரியானந்தம். அவர்கள்..